போகவே போகாத பொடுகு பிரச்னையா? இதை செய்து பாருங்க!

தோற்றப் பொலிவுக்கு முக்கியத்துவம் மிகுந்த காலம் இது. தெருவுக்கு மூன்று அழகு நிலையங்கள் மலிந்துள்ளன. ஆண்கள், பெண்கள், இருபாலர் என்று வகைவகையாக பெருநிறுவனங்களாக அழகு நிலையங்கள் இயங்கி வருகின்றன.

அழகுக்கு அழகூட்டும் இந்த நிலையங்கள் இருந்தாலும், சாதாரண பிரச்னை பலருக்கு நிம்மதியையே கெடுத்துப்போடும். அதில் ஒன்றுதான் பொடுகு! யாரிடத்திலும் நெருங்கி பழக இயலாத அளவுக்கு பொடுகு, தலையை மட்டுமல்ல;மனதையும் ஆக்கிரமித்திருக்கும்.தலையில் பொடுகு இருப்போர் தாமாகவே மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பர். கலந்து பேச தயங்குவர். இந்த தயக்கத்தை ஒழிப்பதற்கு சில எளிய வழிமுறைகள் போதும். பொடுகு இல்லாமல் சுத்தமானதாக உங்கள் தலையை மாற்றும் இயற்கை வழிகளை காண்போம்.

வெந்தயம்:

வெந்தயத்திற்கு அநேக மருத்துவ குணங்கள் உண்டு. அதிக புரதமும் அடங்கியுள்ளது. வெந்தயத்தை பசையாக அரைத்து, மயிர்க்கால்களில்படும்படி தேய்க்கவேண்டும். வெந்தயம் கூந்தலுக்கு பலத்தை அளிப்பதோடு, பொடுகுக்கு காரணமான மண்டையோட்டு சருமத்தையும் ஆற்றுகிறது. வெந்தயத்தில் அமினோ அமிலங்கள், சருமத்தை மிருதுவாக்கக்கூடிய லெஸிதின் போன்றவை உள்ளன. ஆகவே, வெந்தயம், மயிர்க்கால்களை பலப்படுத்தி, பொடுகு பாதிப்பின் காரணமாக கூந்தல் விழுந்துவிடாமல் பாதுகாக்கிறது; தலையில் ஏற்படும் அரிப்பையும் குணமாக்குகிறது.

வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றில் செறிவான சிட்ரிக் அமிலம் உள்ளது. மண்டையோட்டு சருமத்தில் ஏற்படும் அரிப்பை போக்குவதற்கு எலுமிச்சை சாற்றுடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து கலக்கி தலையில் தேய்க்கவேண்டும். இது வறண்ட கூந்தலை அழகானதாக மாற்றும்.

வேப்பிலை:

வேப்ப மரத்தின் இலைக்கு பூஞ்சைக்கு எதிராக செயல்படும் திறன் உண்டு. வேப்பிலையை அரைத்து பசையாக்கி தலையில் தடவினால் பொடுகு ஒழியும். ஒரு கையளவு வேப்ப இலைகளை எடுத்து அதை நீரிலிட்டு வேக வைக்கவும். அந்த நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது கூந்தலை அதைக்கொண்டு கழுவலாம்.

இந்த எளிய முறைகளை கையாளுங்கள்; பொடுகு தொல்லையிலிருந்து முழு விடுதலை கிடைக்கும்.

மழைக்காலத்தில் மழலைச்செல்வங்களின் சருமத்தை பாதுகாப்பது எப்படி?

More News >>