குடித்து விட்டு வண்டி ஓட்டினால் இனி ரூ.10 ஆயிரம் அபராதம் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது
மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் என்று போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இதற்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இதனால், மோட்டார் வாகன சட்டம் அடிப்படையில் கடுமையான திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு, மக்களவையில் ஜூலை 23ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் நேற்று இந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் 108 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு அளித்தனர். 13 எம்பிக்களே எதிர்த்து வாக்களித்தனர்.எனவே, குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவுடன் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வரும்.
இந்த சட்டத்தின்படி, லைசென்ஸ் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதத் தொகை 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவேகமாக வாகனத்தை ஓட்டினாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
ஹெல்மெட் இல்லாமல் டூ வீலர் ஓட்டினால் அபராதத் தொகை 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறியவர்கள் வண்டி ஓட்டினால், பெற்றோருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வண்டி ஓட்டிய சிறுவர்கள் மீதும் சிறுவர் குற்றங்களுக்கான சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் செல்வோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.
வாகன உற்பத்தி செய்யும் நிறுவனம், உரிய விதிமுறைகளை பின்பற்றி தயாரிக்காவிட்டால், 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கு உடனடியாக இலவச சிகிச்சை அளிக்கப்படவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது
விபத்தில் சிக்கியவர்களுக்கான காப்பீட்டுத் தொகை 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் இத்தொகையை ஒருமாதத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கவும் சட்டம் வகை செய்யும். அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்போருக்கான இழப்பீட்டுத் தொகை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாகவும், படுகாயங்களுக்கான இழப்பீடு 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்கிறது.
மேலும், வாகன ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது. ஓட்டுனர் உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதே போல், உரிமம் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிமத்தைப் புதுப்பிக்க ஓராண்டுக்கு முன்பில் இருந்து தொடங்கி, உரிமம் காலாவதியான ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசே ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழை புறக்கணித்ததால் ரத்தான தபால் துறை தேர்வு ; செப் 15-ல் நடைபெறுகிறது