என் பெயரை இழுக்காதீர்கள் ஓங்கி மறுத்த பிரியங்கா
‘காங்கிரஸ் தலைவர் பதவிக்கு என்னை இழுக்காதீர்கள்’ என்று பிரியங்கா காந்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் போனது. இதையடுத்து, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். ஆனால், அதை ஏற்க மறுத்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ராகுல்காந்தியை தலைவர் பதவியில் நீடிக்குமாறு வலியுறுத்தினர்.
இதற்கு ராகுல்காந்தி உடன்படவில்லை. தான் தலைவர் பதவியில் நீடிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும், பிரியங்கா காந்தி பெயரை அவரிடம் சொன்ன போது, ‘‘காங்கிரசின் அடுத்த தலைவர் எங்கள் குடும்பத்தில் இருந்து வரக் கூடாது’’ என்றார். காரணம், காங்கிரசை நேரு குடும்பத்தின் அடிமைக் கட்சி என்று தொடர்ந்து பாஜக விமர்சித்து வருவதுதான்.
ஆனாலும், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், திருவனந்தபுரம் எம்.பி.யும், மூத்த தலைவருமான சசிதரூர் ஆகியோர், கட்சித் தலைமைப் பதவியை பிரியங்கா காந்தி ஏற்க வேண்டுமென்று கூறி வந்தனர். இந்நிலையில், ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் பிரியங்கா காந்தியும் பங்கேற்றார்.
அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு பொறுப்பு வகிக்கும் ஆர்.பி.என்.சிங், கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு பிரியங்கா காந்தியிடம் நேரடியாக கேட்டுக் கொண்டார்.
அதற்கு பிரியங்கா காந்தி, ‘‘இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் என் பெயரை இழுக்காதீர்கள். நான் அதை விரும்பவில்லை’’ என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். எனவே, காங்கிரசுக்கு புதிய தலைவராக வேறொருவரே வருவார் எனத் தெரிகிறது.
ஜனநாயகத்தின் அடிப்படையே பலவீனமாகி விட்டது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு