மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் தூத்துக்குடியில் கைது சரக்கு கப்பலில் தப்பி வந்தவர் பிடிபட்டார்
மாலத்தீவு நாட்டின் முன்னாள் துணை அதிபர் அந்நாட்டிலிருந்து தப்பி, சரக்குக் கப்பல் ஒன்றில் திருட்டுத்தனமாக தூத்துக்குடிக்கு வந்த போது இந்திய உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
2015-ம் ஆண்டில் மாலத்தீவு நாட்டின் துணை அதிபராக இருந்தவர் அகமது அதீப் அப்துல் கபூர். 37 வயதான இவர், அந்த நாட்டு அதிபர் அப்துல் யமீனை 2015-ம் ஆண்டு செப்டம்பரில் கொல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டார். அந்தக் குற்றச்சாட்டில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் சிறையில் இருந்த அவரை கடந்த மே மாதம் வீட்டுக்காவல் சிறைக் கைதியாக்கியது மாலத்தீவு அரசு.
இந்நிலையில் வீட்டுக்காவலில் இருந்த அகமது அதீப் திடீரென தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதப்பட்டது.
இந்நிலையில் மாலத்தீவிலிருந்து தூத்துக்குடிக்கு இன்று வந்த சரக்குக் கப்பல் மூலமாக அகமது அதீப், திருட்டுத்தனமாக தப்பி வந்தது தெரிய வந்தது. சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த அந்தக் கப்பல் கடந்த மாதம் 11-ந் தேதி தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுகளுக்கு சரக்கு ஏற்றிச் சென்றுள்ளது. அப்போது இந்தியாவைச் சேர்ந்த மாலுமியும், இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த 8 சிப்பந்திகளும் சென்றுள்ளனர். ஆனால் கப்பல் திரும்பி வந்தபோது 10 பேர் இருந்துள்ளனர். மாலத்தீவில் ஒரு நபர் மர்மமாக கப்பலில் ஏறியிருந்ததை அறிந்த மாலுமி, தனது நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இத்தகவல் இந்திய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த சரக்குக் கப்பலை இந்திய உளவுத்துறை மற்றும் கடலோர காவல் படை அதிகாரிகள் நடுக்கடலில் வழிமறித்து விசாரித்தனர். அப்போது தான், கப்பலில் இருந்த மர்ம நபர் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அகமத் அதீப்பை தூத்துக்குடி துறைமுகப் பகுதிக்கு கொண்டு வந்து உளவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மாலத்தீவில் வீட்டுச் சிறையில் கைதியாக இருந்த அகமது அதீப் எப்படி தப்பினார்? கப்பலில் மறைவாக தப்பிச் செல்ல அவருக்கு உதவியது யார்? கப்பல் ஊழியர்களும் இதற்கு உடந்தையா? என்பது குறித்து உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பதா? அல்லது மீண்டும் மாலத்தீவு நாட்டு வசம் ஒப்படைப்பதா? என்பது குறித்து மத்திய அரசின் உத்தரவை எதிர்பார்த்துள்ளதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உன்னோவ் பலாத்கார வழக்குகள் டெல்லி நீதிமன்றத்திற்கு மாற்றம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு