காஷ்மீர் பிரச்னையில் பாக். உடன் மட்டுமே பேச்சுவார்த்தை இந்தியா திட்டவட்டம்
பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமே இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்னை, சுதந்திரம் பெற்றது முதலே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீர்ந்தபாடில்லை. இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் நீடிக்க, இரு நாடுகளுமே பாதுகாப்புக்காக செலவிடும் தொகையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளிடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்தித்து பேசினார். இம்ரான் கானுடனான சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டார் என்று கூறியிருந்தார்.
டிரம்பின் இந்தக் கருத்து இந்தியாவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தன.
இதனால், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டிரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்தது. காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபரிடம் மோடி உதவி கேட்கவில்லை என மறுத்தனர். பிரதமர் மோடி எந்தக் கருத்தோ, சமரசம் செய்யுமாறோ கூறவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் மக்களவையில் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், நேற்று வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது மோடியிடம் தான் உள்ளது.
மோடியும், இம்ரான் கானும் மிகச்சிறந்தவர்கள். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று இருநாடுகளும் விரும்பினால் உதவ தயாராக இருக்கிறேன் என்று டிரம்ப் கருத்து கூறியிருந்தார்.
டிரம்பின் இந்தக் கருத்துக்கு இந்தியா உடனுக்குடன் பதிலளித்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில், எந்தப் பிரச்னையானாலும் பாகிஸ்தானும் இந்தியாவும் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தும் என்பதை அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் திட்டவட்டமாக தெரிவித்ததாக ஜெய்சங்கர், தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் பொறுப்பற்ற பேச்சு: மன்னிப்பு கேட்ட அமெரிக்க எம்பி