வருமான வரியை ரத்து செய்யுங்க பொருளாதார வளர்ச்சிக்கு சு.சாமி கொடுக்கும் 5 டிப்ஸ்
நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, 5 டிப்ஸ் கொடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர். சில சமயங்களில் பாஜக அமைச்சர்களைக் கூட கடுமையாக விமர்சிப்பார். ஆனாலும், மோடிக்கு நெருக்கமாக இருந்ததால் இவரை யாரும் பதிலுக்கு விமர்சிப்பதில்லை.
பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்ற போது தனக்கு நிதியமைச்சர் பதவி தருவார் என்று சாமி எதிர்பார்த்தார். ஆனால், மத்திய அமைச்சரவையில் சாமியை வைத்து கொள்ளவே மோடி விரும்பவில்லை என்பது தெரிந்து விட்டது. அவருக்கு நிதியமைச்சர் பதவி தராதது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஏற்கனவே அதிருப்தியடைந்த சாமி அதற்கு போட்ட பதில் ட்வீட்டில், ‘‘இது போன்ற மறுப்புகளை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். நான் கீதையை நம்பி கடைபிடிப்பதால், இந்த மறுப்புகள் எனக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனது கடந்த கால அனுபவங்களின்படி, இந்த ஏமாற்றங்கள் பின்னாளில் இதை விட சிறந்ததை தரும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையி்ல், அவர் இன்று பதிவு செய்த ட்விட்டில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5 ஆலோசனைகள் கூறுகிறேன். 1.தனிநபர் வருமான வரியை ரத்து செய்யுங்கள். 2. அடிப்படை கடன் வட்டியை 9% ஆக குறைக்க வேண்டும். 3. வங்கி டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை 9% ஆக உயர்த்த வேண்டும். 4. வர்த்தகத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை உருவாக்க வேண்டும். கார்ப்பரேட் ஊழியர்கள் குழந்தைகளின் கல்விக்கான வரிச் சலுகை அளிக்க வேண்டும். 5. உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தாராளமாக நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு சாமி கூறியுள்ளார்.
'பெருமைகள் எல்லாம் மூதாதையரான குரங்குகளுக்கே சேரும்' - சந்திரயான் திட்ட வெற்றி குறித்து சு.சாமி 'குசும்பு'