காஷ்மீரில் பதற்றம் அமர்நாத் யாத்திரீகர்கள் வெளியேற உத்தரவு

காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்திரீகர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து, உடனடியாக வெளியேற வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காஷ்மீரில் அதிக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு, காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 16ம் தேதி வரை காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 126 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 75 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த 75 பேரில் புலவாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களும் அடங்குவர்.

தற்போது, அமர்நாத் யாத்திரையில், புலவாமா தாக்குதலைப் போன்று மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று கருதி, ராணுவம் குவிக்கப்பட்டது. குறிப்பாக, 32 ஆயிரம் ராணுவ வீரர்கள், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 25ம் தேதியன்று மேலும் 100 கம்பெனிகளை காஷ்மீருக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. அதாவது 10 ஆயிரம் வீரர்கள் கூடுதலாக வந்து இறங்கினர். இவர்களையும் சேர்த்து காஷ்மீரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே, பாரமுல்லா மாவட்டத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் குழுக்களாக சென்று, வீடு, வீடாக சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள், நிதி வசூலித்து கொடுப்பவர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த ரெய்டு நடந்தது.

தற்போது, மேலும் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளதால், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமர்நாத் செல்லும் யாத்ரீகர்கள் அனைவரும் தங்கள் பயணத்தை ரத்து செய்து, காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இது வரை 3 லட்சம் பேர் பங்கேற்று பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். ஆகஸ்ட் 15ம் தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெறவிருந்த நிலையில், திடீரென அது நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்தும், சுதந்திர தினவிழாவை குறிவைத்தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஆனால், பயங்கரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தப் போகிறது என்ற பேச்சும் அடிபடுகிறது.

More News >>