அபினந்தன் மொபைல் கேம்: அறிமுகம் செய்த விமான படை
பாலகோட் தாக்குதலையொட்டி பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்து சண்டையிட்ட இந்திய விமானபடை விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான், பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அபினந்தனை போன்ற மீசை வைத்துள்ள விமானியை கதாநாயகனாக கொண்ட மொபைல் கேம் செயலியை இந்திய விமானபடை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ்.தானோ அறிமுகம் செய்துள்ளார். இந்த மொபைல்போன் விளையாட்டு செயலிக்கு 'Indian Air Force -- A Cut Above' (இந்திய விமானபடை: ஒரு படி உயர்ந்தது) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயலியில் உள்ள ஒரு விளையாட்டில், அண்டை நாட்டு தீவிரவாதிகளால் அணை ஒன்று சேதப்படுத்தப்படுகிறது. அந்தத் தீவிரவாத குழுவை ஒடுக்கும்படி இந்தியா எடுக்கிற ராஜாங்க முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. ஆகவே, எதிரி முகாமுக்குள் துல்லிய தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதில் ஒரு பயனர் விளையாட முடியும். மிராஜ் 2000 விமானம் இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவதாக சித்திரிக்கப்படுகிறது. இதில் பயனர் பல்வேறு ஆயுதங்களை தெரிந்தெடுக்கலாம்.
மொத்தம் பத்து விளையாட்டுகள் இந்தச் செயலியில் உள்ளன. மின்னணு ஆயுதங்களை பயன்படுத்துதல், பறக்கும்போது நடுவானில் எரிபொருள் நிரப்புதல், எதிரி நாட்டு போர்க்கப்பல்களை சமாளித்து, சொந்த நாட்டு கப்பற்படைக்கு உதவுதல் போன்ற பல்வேறு சாகசங்கள் இவ்விளையாட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
பயன்பாட்டிலுள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கொண்டு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கு இந்தச் செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பத்து விளையாட்டுகள் தவிர, விமானத்தில் பறத்தல் மற்றும் பயிற்சி பெறுதல் ஆகியவற்றையும் விளையாடலாம்.
இந்தச் செயலியில், இந்திய விமான படையில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கான இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. விமான படையில் சேர்வதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த விளையாட்டு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.