மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண் டாக்டர் உலக அழகி போட்டிக்கும் தகுதி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் பாஷா முகர்ஜி, மிஸ் இங்கிலாந்தாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக அழகிப் போட்டிக்கும் பாஷா முகர்ஜி தகுதி பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் டெர்பி பகுதியைச் சேர்ந்தவர் பாஷா முகர்ஜி. இந்தியாவின் மே.வங்க மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் 9 வயதாக இருக்கும் போது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறியவர். இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில், மருத்துவப் படிப்பை முடித்து, அறுவை சிகிச்சை நிபுணர் பட்டமும் பெற்றுள்ளார். ஆங்கிலம், வங்காளி, இந்தி, பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய ஐந்து மொழிகளில் பேசும் திறன் பெற்றுள்ள பாஷா முகர்ஜி நல்ல அறிவித்திறனும் உள்ளவர்.அவருக்கு ஐகியூ 146 ஆக உள்ளது. 15 வயது முதலே மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வந்தார்.
லண்டனில் நடந்த மிஸ் இங்கிலாந்து போட்டியில் பல சுற்று போட்டிகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வென்றார். பட்டம் பெற்ற, சிறிது நேரத்திற்குப் பின், முதன் முறையாக பாஸ்டனில் உள்ள மருத்துவமனையில் டாக்டராகவும் பணியில் சேர்ந்தார்.
மிஸ் இங்கிலாந்து போட்டி துவங்கும் முன்னர் பாஷா முகர்ஜி கூறுகையில், அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்கள் சும்மா நிற்பதாக கருதுகின்றனர். ஆனால், நாங்களும் ஒரு லட்சியத்திற்காக தான் நிற்கிறோம் என்றார்.
மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்றதன் மூலம், இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டிக்கும் பாஷா முகர்ஜி நேரடியாக தகுதி பெற்றுள்ளார். மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற பாஷா முகர்ஜிக்கு 30 ஆயிரம் பிரிட்டன் பவுண்ட் பரிசுத்தொகையும் விடுமுறையில் மொரிஷியஸ் செல்லும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இதற்கு முன் 2006-ம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி ராய் என்ற பெண் மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.