இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் டி-20 தொடர் இன்று ஆரம்பம் அமெரிக்காவில் முதல் போட்டி
இந்தியா மற்றும் வெ.இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர் ஹில் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், இரு முறை டி20 உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பலம் மிக்க வெ.இண்டீஸ் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் அரையிறுதியுடன் வெளியேறிய சோகத்தில் உள்ள இந்திய அணி, அடுத்து வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டித் தொடருக்கு தயாராகி விட்டது.
இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக வெ.இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் இரு அணிகளும், பங்கேற்கும் இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடுகின்றன.
முதல் போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி இரவு நடக்கிறது. சமீபத்திய உலக கோப்பை தொடரில் கோப்பை வெல்ல முடியாத சோகத்தில் உள்ள இந்திய அணி, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. இதனால் இந்த டி20 தொடரில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்தத் தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு தரப்படும் என கூறப்பட்ட நிலையில் கேப்டனாக மீண்டும் அவரே களமிறங்குகிறார். உலக கோப்பை தொடரில் 5 சதம் அடித்த ரோகித் சர்மா, காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான் அணிக்கு துவக்கம் தர காத்திருக்கின்றனர்.
3-வது இடத்தில் இறங்கும் கோஹ்லி இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுப்பார் என நம்பலாம்.கடந்த 2016-ல் இதே மைதானத்தில் 110 ரன்கள் விளாசிய லோகேஷ் ராகுல் இம்முறையும் சாதிப்பார் என எதிர்பார்க்கலாம். தோனிக்கு பதிலாக இத்தொடரில் விக்கெட் கீப்பராக களம் காணும் இளம் வீரர் ரிஷப் பன்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் அனுபவ வீரர்களுடன், துடிப்பான இளம் வீரர்களும் களத்தில் இறங்குகின்றனர்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாருடன் கலீல் அகமது, தீபக் சகார் ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் ஆல் ரவுண்டர் இடத்தில் குர்னால் பாண்ட்யா, ராகுல் சகார், உலக கோப்பை தொடரில் மிரட்டிய ஜடேஜா என பலர் மாயாஜாலம் காட்ட காத்திருக்கின்றனர்.
டி-20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் 2012, 2016 என இரு முறை, உலக கோப்பை வென்ற அணி வெ.விண்டீஸ். தவிர நீண்ட இடைவெளிக்குப் பின் கிட்டத்தட்ட முழு பலத்துடன் களமிறங்கும் விண்டீஸ் அணி, இந்தியாவுக்கு கடும் சவால் தருவது உறுதி.
இந்தியாவும் வெ.இண்டீஸ் அணிகள் இதுவரை மோதியுள்ள 11 டி-20 போட்டிகளில் தலா 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதனால் இரு அணிகளும் சமபலத்துடன் இன்றைய போட்டியில் விளையாட உள்ளன
புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் இதுவரை 8 டி-20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 6-ல் வென்றுள்ளன. ஒரு போட்டி மழையால் ரத்தானது. ஒரு போட்டியில் மட்டுமே 'சேஸ்' 2-வதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் முதலாவது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் இந்தப் போட்டியில் டாஸும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.