டாக்டர் படிப்பில் சேர்ந்து இடையில் விலகினால் ரூ .10 லட்சம் அபராதமாம் மருத்துவ மாணவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடி

சாமான்யர்களின் மருத்துவக் கனவுக்கு சாவுமணி அடிப்பது போல் அடுத்து ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மருத்துவக் கல்வி இயக்குநரகம். அட்மிஷன் பெற்றுவிட்டு படிப்பை தொடர முடியாவிட்டால் ரூ .10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பு வெளியாகி, மாணவர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.

கிராமப்புற ஏழை மாணவர்களும், +2வில் கூடுதல் மதிப்பெண் மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்ற நிலை இருந்த தமிழகத்தில் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான நீட் என்ற நுழைவுத் தேர்வு கொண்டு வந்து, தமிழகத்தில் வெளி மாநில மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவு திறந்து விடப்பட்டுவிட்டது. இதனால், கூடுதல் பணம் செலவழித்து சிபிஎஸ்சி போன்ற பள்ளிகளில் படித்த, வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே டாக்டர்களாக முடியும் என்ற நிலைமை உருவாகி விட்டது. அரசுப் பள்ளிகளில் படித்த, ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது இனி கனவிலும் கிடையாது என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது.

இவ்வளவு தடைகளையும் கடந்து, தப்பித்தவறி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள ஏழை மாணவர்களுக்கு இப்போது புது நெருக்கடியை தமிழக மருத்துவ இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்த இடங்கள் அனைத்தும் முழுவதும் நிரப்பப்பட்டு விட்டன. இந்நிலையில் தான் கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள், உரிய கட்டணம் செகத்தி கல்லூரிகளில் சேர முடியாமல் போனாலோ, சேர்ந்த பின் மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டாலோ ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பது தான் அந்த புதிய அறிவிப்பு.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பை கலந்தாய்வில் தேர்வு செய்த மாணவர்கள், அதனைத் தொடர விரும்பாவிட்டால் ஆக 3-ந்தேதி சனிக்கிழமைக்குள் (இன்று) கல்லூரியில் இருந்து விலகி அந்த இடங்களை திரும்ப ஒப்படைக்கலாம். அதே வேளையில் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக. 4, 5) கல்லூரியை விட்டு நிற்கும்பட்சத்தில், கலந்தாய்வின்போது அளிக்கப்பட்ட உறுதிச் சான்றின்படி ரூ.1 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 6-ஆம் தேதி அல்லது அதன் பிறகு கல்லூரிகளில் இருந்து விலகுபவர்கள் ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, பி.டி.எஸ். இடங்களைப் பெற்றவர்கள், படிப்பைத் தொடர விரும்பாவிட்டால், ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஆக. 4) தங்களது இடங்களைத் திரும்ப ஒப்படைக்கலாம். அதே, ஆக. 5 அல்லது 6 -ஆம் தேதிகளில் படிப்பை கைவிடுவதென்றால் ரூ.1 லட்சமும், அதன் பிறகு கல்லூரிகளை விட்டு நின்றால் ரூ.10 லட்சமும் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவக் கல்வித் துறையின் இந்த திடீர் அறிவிப்பு கஷ்டப்பட்டு படித்து, நீட் தேர்விலும் சீட் பெற்ற ஏழை மாணவர்களை பெரும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது என்றே கூறலாம். மருத்துவக் கல்லூரிக் கட்டணமான லட்சக்கணக்காக ௹பாயை எளிதில் புரட்ட முடியாத ஏழை மாணவர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. சில காலம் கூட அவகாசம் கொடுக்காமல், இன்றே, இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்ற அறிவிப்பால், மாணவர்கள் பலர் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

அமெரிக்காவில் பயங்கரம்; திருவிழாவில் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டு தள்ளினார்: 3 பேர் சாவு, 12 பேர் படுகாயம்

More News >>