ஆடிப்பெருக்கு விழா: காவிரிக்கரையில் குவிந்த மக்கள்..! ஆற்றில் நீர் குறைவால் ஏமாற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரிக்கரை நெடுகிலும் மக்கள் உற்சாகமாகத் திரண்டனர். ஆற்றில் போதிய தண்ணீர் ஓடாத நிலையிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு பொதுமக்கள் வழிபடுவர்.

வழக்கம் போல இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் கூடி பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக் கொருவர் கழுத்தில் அணிவித்தனர். புதுமணத் தம்பதிகள் காவிரியில் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே தேங்கியிருந்ததால் கால்களை மட்டுமே நனைக்க முடிந்தது. பின்னர் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை பட்டையில் வைத்து, தேங்கியிருந்த ஆற்றில் விட்டனர்.

புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.அதே போல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். பல பெண்கள் ஆற்றில் முளைப்பாரியை விட்டு வழிபட்டனர். இதேபோல விவசாயிகள் பலரும் தங்களது குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி படித்துறையில் தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கட்டும் என வேண்டி வழிபட்டனர்.

இப்படி பலதரப்பட்ட பக்தர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து இருந்ததால் காவிரிக்கரை நெடுகிலும் ஆடிப்பெருக்கு விழா களை கட்டியிருந்தது, கடந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஆனால் இந்த ஆண்டோ போதிய மழையின்றி காவிரி ஆறு வறண்டு காணப்பட்ட நிலையில், ஆடிப்பெருக்குக்காக நேற்று தான் 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.தாமதமாக திறக்கப்பட்ட இந்த தண்ணீர் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்றடையவில்லை. இதனால் ஆடிப்பெருக்கு தினத்தில் ஆற்றில் உற்சாகமாக குளித்து மகிழ முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்ததையும் காண முடிந்தது.

‘நீரின்றி அமையாது உலகு’... நமது பாரம்பரியம் - பாகம் 6

More News >>