எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்- ஓபிஎஸ் இபிஎஸ் மீது டிடிவி தினகரன் கண்டனம்
முத்தலாக் விவகாரத்தில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்கு, இரட்டைத் தலைமை என்ற பெயரில் ஓபிஎஸ், இபிஎஸ் களங்கம் ஏற்படுத்தி விட்டார்கள் என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு அருகே உள்ள ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில், தீரன் சின்னமலை சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது:
தீரன் சின்னலை நினைவு நாளில் 10 அமைச்சர்கள் பங்கேற்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தான் பங்கேற்றது ஏன்?என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்காக முத்தலாக் சட்டம் கொண்டு வருவதாக மத்திய அரசு சொல்கிறது. எந்த ஒரு சட்டமும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. அரசு கொண்டு வரும் எந்த ஒரு சட்டமும் அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்ச உணர்வை இந்தியாவில் இன்று பல்வேறு தரப்பு மக்களும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு சட்டமும் விருப்பு வெறுப்பு அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
முத்தலாக் விவகாரத்தில் மக்களவையில் ஒரு நிலைப்பாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடும் என அதிமுக எடுத்துள்ளது. உலகிலேயே இது போன்ற நிலைப்பாடு எடுக்கும் கட்சி குறித்து நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இரட்டைத் தலைமை என்ற பெயரில் மக்கள் விரும்பாத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி ஆட்சி நடத்திக் கொண்டு, இது போன்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என்பது தமிழக மக்களின் எண்ணம். ஆனால், மத்திய அரசு அதனைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது வருத்தமளிக்கிறது.
உள்ளாட்சித்தேர்தல் வந்தால் அமமுக நிச்சயம் போட்டியிடும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் மசோதா: 'அதிமுக ஆதரித்ததா?எதிர்த்ததா? என்பது விடுகதை' ப.சிதம்பரம் கிண்டல்