அமெரிக்காவின் டெக்ஸாசில் பயங்கரம் வணிக வளாகத்தில் சரமாரியாக சுட்ட மர்ம இளைஞன் - 20 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள எல் பேஸோ நகரில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம இளைஞன் ஒருவன் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டதில் 20 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
டெக்சாஸ் மாகாணத்தின் எல் போஸோ நகரில் வால்மார்ட் நிறுவனத்தின் வணிக வளாகத்தில் நேற்று மாலை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. பரபரப்பான மாலை நேரத்தில் மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்த போது உள்ளே நுழைந்த மர்ம இளைஞன் ஒருவர் நவீன துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.உயிர் பிழைக்க பலர் சிதறி ஓடினர்.
உடனடியாக வணிக வளாகத்தை சுற்றி வளைத்த போலீசார், மர்ம இளைஞனை மடக்கிப் பிடித்தனர். அந்த இளைஞன் பெயர் பேட்ரிக் குரேசியஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய மேலும் 3 நபர்களை கைது செய்து விசாரித்து வருவதாக டெக்ஸாஸ் மேயர் டீ மார்கோ கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூ ஜெர்சியில் உள்ள கோல்ப் கிளப்பில் வார விடுமுறையை கழித்து வருகிறார்.
இந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை மிசிசிபியில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம இளைஞன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2பேர் கொல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார். இதே போன்று கடந்த ஞாயிற்று கிழமை வடக்கு கலிபோர்னியாவில் உணவுத் திருவிழா ஒன்றில் 19 வயது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.