காஷ்மீரில் ஊடுருவ முயன்று கொல்லப்பட்ட 7 பாக்.வீரர்கள் சடலங்களை எடுத்துச் செல்ல இந்தியா அனுமதி

ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியப் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லைக்கோடு அருகே 2 நாட்களாக கிடக்கும் பாகிஸ்தான் வீரர்களின் சடலங்களை மீட்க முடியாமல் அந்நாட்டு படையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் சடலங்களை மீட்டுச் செல்ல இந்திய ராணுவம் பெருந்தன்மையாக அனுமதி வழங்கியுள்ளது.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறாக இந்திய ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது. பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தவும், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து குண்டு வெடிப்பு சதியில் ஈடுபடப் போவதாகவும் வந்த ரகசிய தகவலை அடுத்தே இந்தியப் படைகள் உஷார்படுத்தப்பட்டன.இதனால் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்களையும் அவசர அவசரமாக வெளியேற உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோப்பூர் நகரில் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அங்கு ராணுவ வீரர்கள் நேற்று கூடுதலாக குவிக்கப்பட்டனர். மேலும்காஷ்மீருக்குள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரின் சகோதரன் உள்பட 15 பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தினருக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, இந்திய எல்லைக்குள் கெரான் பிரிவில் ஊடுருவும் முயற்சியாக பாகிஸ்தானிய அதிரடி படையினர் ஈடுபட்டனர். அவர்களை இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து தடுத்தது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.இதில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானிய அதிரடி படையினர் மற்றும் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

கொல்லப்பட்ட 7 பேரின் உடல்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 2 நாட்களாக கிடக்கின்றன. தொடர்ந்து கடும் மோதலால் அவர்களின் உடல்களை இந்திய ராணுவமோ, பாகிஸ்தான் ராணுவமோ கைப்பற்ற முடியவில்லை.

இந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 7 பாகிஸ்தான் வீரர்களின் உடலை கொண்டு செல்ல இந்திய ராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களது உடல்களை கொண்டு செல்ல முறைப்படி வெள்ளை கொடி ஏந்தி அணுகும்படியும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

More News >>