வேலூர் மக்களவை தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா புகாரால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தல் ரத்து செய்யப்பட்ட போதும் ஏ.சி.சண்முகமும், கதிர் ஆனந்தும் களத்தில் இருந்த நிலையில் தற்போதும் இருவரும் போட்டியிடுகின்றனர். களத்தில் 28 வேட்பாளர்கள் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரு கட்டமாக பிரச்சாரம் மேற்கொண்டனர். அமைச்சர்களில் பெரும்பாலானோர் தொகுதியிலேயே முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் 5 நாட்கள், தொகுதி முழுவதும் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் கடைசி நாளில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டமும் நடைபெற்றது. 20 நாட்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.காலையிலேயே வாக்கு சாவடிகள் முன் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியாகும்.

வேலூரில் அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது; கடைசி நாளில் பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

More News >>