தெற்கு சூடான், கொசாவோ போல் காஷ்மீரை அழிக்கப் பார்ப்பதா? வைகோ ஆவேசம்
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதும், சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்வதும், தெற்கு சூடான், கொசாவோ போன்ற நாடுகள் அழிந்தது போல், காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி என்றும், நாட்டில் அவசர நிலையை கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது என்றும் மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார்.
மாநிலங்களவையில் இன்று காஷ்மீர் தொடர்பான முக்கிய தீர்மானங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அதில் ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு & காஷ்மீர் செயல்படும் என்றும் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அமித் ஷா அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஆவேசமாக குரல் எழுப்பினார். விவாதத்தின் போது வைகோ பேசுகையில், இது போன்று மத்திய அரசு செயல்படுவது ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம். நெருக்கடி நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசு முயற்சிக்கிறது.
கொசாவோ, தெற்கு சூடான் போன்ற நாடுகளும் இது போன்ற பிரிவினை சூழ்ச்சிக்கு ஆளாகி அந்த நாடுகள் இன்று அழிவின் உச்சத்தில் உள்ளன. அதே போன்று காஷ்மீரையும் அழிக்கச் செய்யும் முயற்சி தான் மத்திய அரசின் நடவடிக்கையாக உள்ளது என்று தீர்மானத்திற்கு எதிராக வைகோ ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில்,அதிமுக, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
'காஷ்மீரில் படைகள் குவிப்பு ஏன்?' சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு என பரவும் தகவல்