காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியது
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றுவது உள்ளிட்ட மத்திய அரசின் மசோதாக்கள் மீது மாநிலங்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேறியது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து வழங்கும் சட்டப் பிரிவு ரத்து உள்ளிட்ட தீர்மானங்களை மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்ய வகை செய்யும் மசோதா, மாநிலத்தை இரண்டாக பிரிப்பது உள்ளிட்ட இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்துக்கு பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். ஓட்டுச்சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாக்களுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.
இதனால் ஜம்மு &காஷ்மீர் லடாக் என இரு யூனியன் பிரதேசமாக பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானம் நிறைவேறியது.இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.