மெகபூபா, உமர் கைது காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவை 1954-ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி அந்த மாநிலத்தில், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் சொத்துக்களை வாங்க முடியாது.

அம்மாநிலத்துக்கென தனி குடியுரிமைச் சட்டமும் வழங்கப்பட்டிருந்தது. அம்மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் வெளி மாநில ஆண்களை திருமணம் செய்தால் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்பது போல் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் பிரிவு 35ஏ சட்டப்பிரிவும் அமல்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவு, 35ஏ பிரிவு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டுமென பாஜக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. இன்று, மாநிலங்களவையில் பிரிவு 370ன்படியே ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து 370 மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது -இதற்காக மத்திய அரசு கடந்த வாரமாக, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் சுமார் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்து பெரும் பீதியை ஏற்படுத்திவிட்டது. காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவும், குண்டு வெடிப்பு சதி நடக்கப் போகிறது என்றும், அதனால் முன்னெச்சரிக்கையாக படைகள் குவிக்கப்படுகிறது என்றும் கூறிவந்தது. இதனால் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு வாரமாகவே சஸ்பென்ஸ் நீடித்தது.

இந்நிலையில் 370-வது சட்டப் பிரிவை ரத்து செய்தால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி காஷ்மீரில் கொந்தளிப்பான சூழல் நிலவும் என்பதால் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மகபூபா முப்தி உள்ளிட்ட பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மாநிலம் முழுவதும் இருந்த சுற்றுலா பயணிகளும், யாத்திரை சென்றவர்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். காஷ்மீர் மாநிலம் முழுவதும் தெருக்களில் படை வீரர்கள் குவிக்கப்பட்டு ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டது.

இதனால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இந்நிலையில் 370-வது சட்டப் பிரிவை நீக்க முடிவு செய்யப்பட்டு, அதனை ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றினார்.

மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியம் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கப்படும் என்ற அறிவிப்பையும் அமித் ஷா வெளியிட்டார். மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கும், அதற்காக காஷ்மீரில் படைகள் குவிக்கப்பட்டு அடக்கு முறையை கையாண்டதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, காஷ்மீரில் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக, காஷ்மீரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More News >>