எதிர்குரல்களை முடக்கும் பிஜேபியின் ஆதிக்கப்போக்கு கமல் கடும் கண்டனம்

ஜனநாயகத்தில் எதிர்குரல்களை முடக்கும் மத்திய அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது என்று கமல் கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து மற்றும் சலுகைகள் அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவை நீக்கும் வகையில் மாநிலங்களவையில் ஒரு தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்தார். இதற்கு ஆதரவாக 125 பேரும், எதிர்ப்பாக 61 பேரும் வாக்களித்தனர். எனினும், நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறினாலும், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல். இது போன்ற முக்கியமான முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல், தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இம்முடிவினை எடுத்திருக்கின்றது.

அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ஆகியவை இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே, அதில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்றிருக்க வேண்டும். 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை சட்டப்பூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது.

சென்ற முறை பண மதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப் பிரிவு நீக்கம், என்று தொடர்ந்து சர்வாதிகாரமும் பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News >>