காஷ்மீர் மசோதாக்கள் மீது மக்களவையில் விவாதம் அமித்ஷா தாக்கல் செய்கிறார்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 ரத்து தீர்மானம் மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் இன்று மக்களவையில் விவாதிக்கப்படுகின்றன.
அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது. மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஸ்ரீநகர் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்குவதற்கான தீர்மானமும் இன்று மக்களவையில் கொண்டு வரப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மசோதாக்களை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து அவற்றின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
இந்திய ஜனநாயகத்தில் இன்று கருப்பு தினம்; மெகபூபா முப்தி கண்டனம்