பள்ளி பாடப்புத்தகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பக்கம் இடம்பெற ஒப்புதல்

பள்ளி பாடப்புத்தகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பக்கம் இடம் பெற மாநில சாலைப் பாதுகாப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாலை பாதுகாப்பு ஆணையர் (போக்குவரத்து ஆணையர்) தயானந்த் கட்டாரியா வெளியிட்ட செய்தி குறிப்பு: போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையின் கீழ் 6வது மாநில சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடந்தது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க எடுக்கப்பட உள்ள வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் தலைமைச் செயலர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மற்றும் இதர உயர் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2016ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை ஒப்பிடும்போது 2017ம் ஆண்டில் 5869 சாலை விபத்துக்களும் 1061 உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.  2018ம் ஆண்டில் மாநிலத்தில் 4995 உயிரிழப்புக்களை குறைக்க இலக்கீடு நிர்ணயம் செய்ததை குழு ஏற்றுக் கொண்டது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையக சாலைகளில் உள்ள 133 அங்கீகரிக்கப்படாத குறுக்கு வழிகளை மூடிவிடுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்திற்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய பாலங்கள், மதகுகள் உள்ள இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு  குறுகிய பாலங்கள் தெளிவாக தெரியும் பொருட்டு தகுந்த எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் போதிய மின் விளக்கு வசதிகள் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் செய்து முடிக்குமாறு நெடுஞ்சாலைத் துறைக்கு கோரப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வரை மட்டும் அதிவேகம், அதிக பாரம், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 1.87.213 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு இரு சக்கர வாகன ஓட்டி மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.

சுற்றுலா சீருந்து ஓட்டுநர்கள் மற்றும் மேக்சிகேப் ஓட்டுநர்களின் பணி நேரத்தை முறைப்படுத்தும் பொருட்டு பணி நேரத்தை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் அனுமதிச்சீட்டு, தகுதிச் சான்று ஆகியவை புதுப்பிக்கப்படமாட்டாது. மேலும், அவர்களுடைய ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். மாநிலக் கல்வி வாரியம் வகுப்பு 1 முதல் 12 வரை உள்ள பாடப்புத்தகங்களில் சாலைப் பாதுகாப்பு இடம் பெற்றிருப்பது குறித்து மாநில சாலைப் பாதுகாப்புக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>