காஷ்மீர் விவகாரம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 10-ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப் பிரிவை ரத்து செய்தும், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான தீர்மானங்களை மாநிலங்களவையிலும், மக்களவையிலும் கொண்டு வந்து அரசு நிறைவேற்றி விட்டது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ், திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு காட்டினாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று மத்திய அரசு அதனை நிறைவேற்றி விட்டது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை திமுக கடுமையாக எதிர்த்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதனை ஜனநாயகப் படுகொலை என்று கண்டனம் தெரிவித்திருந்தார். திமுக எம்.பி.க்களும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வரும் 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.இது குறித்து திமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.