முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ் திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67.

டெல்லி முதல்வர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர் சுஷ்மா ஸ்வராஜ் (67). நாட்டின் 2வது பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர். பாஜகவின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உறுத்துணையாக இருந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறி அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில், சுஷ்மாவுக்கு நேற்றிரவு(ஆக.6) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இரவு 9.30 மணியளவில் அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.   அங்கு அவருக்கு 5 மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சுஷ்மாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

சுஷ்மா மரணச் செய்தியைக் கேட்டு பாஜக தலைவர்கள்  அதிர்ச்சியடைந்தனர். பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் மருத்துவமனை விரைந்தனர். சுஷ்மா மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More News >>