சுஷ்மா ஸ்வராஜ் மறைவு:ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளின் தலைவர்களும் சுஷ்மாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

67 வயதான முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரும், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ், திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு காலமானார். சுஷ்மாவின் திடீர் மரணச் செய்தி கேட்டு பாஜக தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு,பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

சுஷ்மாவின் உடல் நேற்று நள்ளிரவே அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அவரின் உடல் இன்று பிற்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பின் பிற்பகல் 3 மணியளவில் லோதி ரோடு பகுதியில் உள்ள மின்சார மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ், 2014 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தின் விதிஷா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மோடி அரசின் கீழ் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின் இந்த பொறுப்பை வகித்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்ற சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத்துறை அமைச்சராக தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்த சுஷ்மா, அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

சுஷ்மாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். அதில் சுஷ்மா ஸ்வராஜ் பொது சேவைக்காக வாழ்க்கையை அர்பணித்த ஒரு சிறந்த பெண் தலைவர். தற்போது அவரை இந்தியா இழந்து தவிக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு தூண்டுதலாக சுஷ்மா இருந்துள்ளார்.சிறந்த பேச்சாளரான சுஷ்மா, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினராலும் போற்றப்பட்டவர்.

அவர் பதவி வகித்த அனைத்து துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர். குறிப்பாக, வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முக்கிய காரணமாக இருந்துள்ளார். உலகின் பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் இன்னல்களை சந்திக்கும் போது அவர்களுக்கு சுஷ்மா உதவியும் புரிந்துள்ளார் என மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சேவையை ஆற்றிய சுஷ்மா ஸ்வராஜ்ஜின் மறைவை சொந்த இழப்பாக கருதுவதாக குறிப்பிட்ட மோடி, சுஷ்மாவை இழந்து வாடும் அவரது . குடும்பத்தார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில், சுஷ்மாவின் மறைவு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும், ஓம் சாந்தி என ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி,குலாம் நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துள்ளனர். இதே போன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேபாள பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் சுஷ்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'25 வயதிலேயே அமைச்சர் பதவி'- அரசியலில் ஜொலித்து உச்சம் தொட்ட சுஷ்மா

More News >>