அத்திவரதர் தரிசனத்திற்கு 16, 17ம் தேதிகளில் விஐபிகளுக்கு அனுமதியில்லை
அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் 16, 17ம் தேதிகளில் விஐபிகளுக்கு அனுமதியில்லை என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
வைணவர்களால் 108 புண்ணிய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர், கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். வெளிமாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு செல்கி்ன்றனர். தினமும் ஏராளமான வி.ஐ.பி.க்களும் வந்து தரிசிக்கின்றனர்.
இந்நிலையில், சயனக் கோலத்தில் அத்திவரதரைப் பார்த்தவர்கள், நின்ற கோலத்திலும் அவரை தரிசித்தால் அதிக நன்மை கிட்டும் என்று சிலர் கிளப்பி விட்டதால், ஏற்கனவே தரிசித்தவர்களும் மீண்டும் காஞ்சிபுரத்திற்கு படையெடுகின்றனர். வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்றே நான்கு லட்சம் பேர் திரண்டனர். அவர்களில் 3 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகம் கூறுகிறது.
ஆனால், இத்தனை நாட்களாகியும் டோனர் பாஸ் வைத்திருந்தவர்களைக் கூட முறையாக வரிசைப்படுத்தி அனுப்ப தெரியாமல் அறநிலையத்துறையும், காவல் துறையும் விழிபிதுங்கி நிற்கின்றன. இரண்டு துறைகளுக்குமே ‘திட்டமிடல்’ என்பதே சரியாக தெரியவில்லை என்று பக்தர்கள் புலம்பலுடன் திரும்பிச் செல்கி்னறனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் வரும் 17-ம் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது. அன்று, கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணியுடன் மூடப்படும். அதன் பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 16ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நள்ளிரவு 2 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுமுறை என்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 7,500 வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக உள்ள நாட்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வரும் 16, 17ம் தேதிகளில் டோனர் பாஸ் மூலம் முக்கியப் பிரமுகர்கள் தரிசனம் செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அத்திவரதர் பற்றிய பேச்சு; என்னை தனிமைப்படுத்த சிலர் சதிவேலை : சுகிசிவம்