தங்கம் விலை ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ.1872 உயர்வு

தங்கம் விலை இன்று(ஆக.7) சவரன் ரூ.28 ஆயிரத்து 352 ரூபாயாக உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று சவரன் ரூ.27,064க்கு விற்றது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரி்த்து வருகிறது. இன்று(ஆக.7) சவரனுக்கு ரூ.568 அதிகரித்தது. சவரன் விலை ரூ.28,352க்கு விற்கிறது. இது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச் சந்தையில் தங்கம் விலை நிலவரம் எப்படி மாறுகிறதோ, அதற்கேற்ப இங்கும் விலை உயர்கிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு, பொருளாதார சூழல்களுக்கு ஏற்ப சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்கிறது. மேலும், தங்கம் இறக்குமதி மீது மத்திய அரசு சுங்கவரியை உயர்த்தியிருப்பதும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இன்னும் கூட விலை உயர வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தனர்.

சென்னை சந்தையில் வெள்ளி கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.45.70க்கு விற்கிறது.

தங்கம் விலை கிடுகிடு 2 நாளில் ரூ.1000 உயர்வு

More News >>