சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு, இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
சென்னை-சேலம் இடையே 277 கி.மீ.,தூரத்திற்கு எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக நிலம் கையகபடுத்தும் வகையில், தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இந்தத் திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பாதிக்கப் பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிமுக, பாஜக தவிர்த்த தமிழக அரசியல் கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வெளியிட்டது. மேலும் விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.இதனால் இந்தத் திட்டம் இப்போது முடங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை, எட்டு வழிச்சாலை பணியை தொடங்க மாட்டோம். சாலை அமைப்பது போன்ற எந்த கட்டுமான பணிகளும் நடக்காது என மத்திய அரசு உறுதி அளித்தது.
அனுமதி கிடைக்கும் வரை பணி இல்லை என்றால் நீதிமன்றத்திடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால், விசாரணையை வரும் 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காஷ்மீரில் ஏதோ நடக்கப் போகிறது, ஆனால், யாருக்கும் தெரியவில்லை; கவர்னரை சந்தித்த உமர் பேட்டி