கருணாநிதி சிலை திறப்பு, நினைவு தின பொதுக் கூட்டம் மம்தா பானர்ஜி பங்கேற்பு

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் இன்று மாலை அவருடைய சிலை திறப்பு விழா மற்றும் நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

முன்னாள் முதல்வரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தலைவராக இருந்த தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரான மு.கருணாநிதி, கடந்த ஆண்டு இதே நாளில் 94 வயதில் மறைந்தார். அவர் மறைந்து ஓராண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இன்று முதலாவது நினைவு தினத்தினை முன்னிட்டு திமுக சார்பில் அமைதிப் பேரணி, சிலை திறப்பு விழா, பொதுக் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இன்று காலை அமைதிப் பேரணி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கியது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த பேரணி தொடங்கியது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி.க்களான கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் பங்கேற்றனர்.

வாலாஜா சாலை வழியாகச் சென்ற அமைதிப் பேரணி, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. அங்கு கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவருடைய சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெறுகிறது.சென்னை முரசொலி நாளிதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். பின்னர் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பலர் பங்கேற்று பேசுகின்றனர். இறுதியில் மு.க.ஸ்டாலின் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி நேற்றிரவே சென்னை வந்தார். மம்தாவை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கி வரவேற்பு தெரிவித்தார்.

கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

More News >>