ஒரு ரூபாய் தருவதற்கு வரச் சொன்ன சுஷ்மா வழக்கறிஞர் ஹரீஷ் வருத்தம்
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடந்த 2016ம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவர் இந்திய உளவாளி என்று குற்றம்சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், பாகிஸ்தான் தீர்ப்பை ரத்து செய்து மறு விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாதவுக்காக வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே. அவரை இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் இருந்தார். அந்த வழக்கில் தனக்கு கட்டணமாக ஒரு ரூபாயை அடையாளமாக தந்தால் போதும் என்று ஹரீஷ் சால்வே கூறியிருந்தார்.
இந்நிலையில், சுஷ்மா ஸ்வராஜிடம் நேற்றிரவு ஹரீஷ் சால்வே தொலைபேசியில் பேசியிருக்கிறார். இது குறித்து சால்வே கூறுகையில், ‘‘நான் நேற்றிரவு 8.50 மணிக்கு அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பீஸ் ஒரு ரூபாய் தர வேண்டும் என்று தமாஷாக சொன்னேன்.
அவரும் நாளை காலை 6 மணிக்கு வந்து கட்டணத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். அவருடன் பேசியதே மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. ஆனால், காலையில் நான் பேசுவதற்கு முன்பே அவர் காலமாகி விட்டார்’’ என்று உணர்ச்சிவசப்பட்டு தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம்