முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பாஜக தலைவர்கள் பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், நேற்றிரவு திடீர் மாரடைப்பால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சுஷ்மா சுவராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் என பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டு தூதர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பிற்பகலில் பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த சுஷ்மா சுவராஜ் உடலுக்கு பாஜக தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு, டெல்லி லோதி சாலையில் உள்ள மின் மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பாஜக முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர். மின் மயானத்தில் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா ஸ்வராவின் மகள் பன்சூரி ஸ்வராஜ் இறுதிச் சடங்குகளை செய்த பின்னர், 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.