எடப்பாடி, உடுமலையை விமர்சித்ததால் கல்தா மணிகண்டன் டிஸ்மிஸ் பின்னணி
அரசு கேபிள் டிவி விவகாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை சரமாரியாக விமர்சித்ததுடன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் புகார் வாசித்ததே, அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் தூக்கியடிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பகிரங்கமாக குற்றம்சாட்டி பேட்டி அளித்த 10 மணி நேரத்தில் மணிகண்டனை டிஸ்மிஸ் செய்து, இரண்டரை ஆண்டு காலத்தில் முதல் முறையாக அமைச்சர் ஒருவரை டிஸ்மிஸ் செய்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் மணிகண்டனின் பதவி நேற்றிரவு திடீரென பறிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் அமைச்சர் மணிகண்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார், மணிகண்டன் வகித்து வந்த இலாகாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவனிப்பார் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உத்தரவு வெளியானது.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் முதல்முறையாக அமைச்சர் ஒருவரின் பதவியைப் பறித்துள்ளார். அதுவும் அரசு கேபிள் டிவி விவகாரத்தில் இரு அமைச்சர்கள் இடையே வெடித்த மோதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடப்பாடி மேற்கொண்டுள்ளார். இந்த அரசு கேபிள் டிவி நிறுவனத்தை 2011-ல் ஆட்சிக்கு வந்த போது ஜெயலலிதா தொடங்கி, அதற்கு உடுமலை ராதாகிருஷ்ணனை தலைவராக்கினார். வளம் கொழிக்கும் இந்த அரசு கேபிளில் உடுமலை ராதாகிருஷ்ணனும் வளமானார். இதைப் பயன்படுத்தி அட்சயா எனும் பெயரில் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தையும் அவர் தொடங்கினார். உடுமலை ராதாகிருஷ்ணன் மீது எழுந்த புகார்களால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார்.
அரசு கேபிள் டிவி தலைவர் பொறுப்புக்கு வேறு யாரும் நியமிக்கப்படாத நிலையில், தகவல் தொழில் நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் அந்தப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். ஆனால் எப்படியோ முதல்வர் எடப்பாடியை சரிக்கட்டி மீண்டும் அரசு கேபிள் டிவி தலைவர் பதவியை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சமீபத்தில் கைப்பற்றி விட்டார். தொடர்ந்து அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு மற்றும், அரசு செட்டாப் பாக்ஸ் வைத்திருந்து தனியார் கேபிளுக்கு மாறியவர்கள் மீண்டும் அரசு கேபிளுக்கு மாற வேண்டும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியது போன்றவற்றால் கொதித்துப் போனார் அமைச்சர் மணிகண்டன். நேற்று காலை பரமக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணன் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உடுமலை ராதாகிருஷ்ணனால் அரசு கேபிள் டிவிக்கு பெரும் நஷ்டம். முதலில் 2 லட்சம் இணைப்புகள் வைத்துள்ள அவருடைய அட்சயா கேபிள் நிறுவனத்தை அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைத்தாலே அரசுக்கு கூடுதல் லாபம் வரும் என்றெல்லாம் மணிகண்டன் விமர்சித்தார். அத்துடன் கேபிள் கட்டண குறைப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு குறித்தும் மணிகண்டன் புகார் வாசிக்க, அடுத்த 10 மணி நேரத்தில் அவருடைய அமைச்சர் பதவியே இப்போது அதிரடியாக பறி போயுள்ளது.
மணிகண்டனிடம் பறிக்கப்பட்ட அமைச்சர் பதவிக்கு பதிலாக வேறு யாரையும் புதிய அமைச்சராக்காமல், அந்தப் பொறுப்பை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வசம் கூடுதல் பொறுப்பாக கொடுத்ததிலும் முதல்வர் எடப்பாடி சாமர்த்தியமாக காய் நகர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.மதுரை மாவட்டத்தில் அரசியல் செய்யும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மேலும் ஆர்.பி.உதயகுமாரும் அமைச்சர் பதவி பறிபோன மணிகண்டனின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான் என்பதால், கட்சிக்குள் பிரச்னை வராமல் இருக்க எடப்பாடி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், மணிகண்டன் நீக்கத்தைத் தொடர்ந்து அதிமுகவுக்குள் மீண்டும் ஒரு கலகம் நிச்சயம் வெடிக்கும் என்றே கூறப்படுகிறது. அமைச்சர் பதவி பறிபோன மணிகண்டன், முதல்வர் மற்றும் கொங்கு மண்டல அமைச்சர்கள் மீது அடுத்துடுத்து குற்றச்சாட்டுகளையும், ஊழல் புகார்களையும் வாசிக்க தயாராகி விட்டார் என்றும் இது கட்சியிலும், ஆட்சியிலும் புயலை ஏற்படுத்தி சிக்கலை உண்டாக்கப் போவது உறுதி என்றும் அதிமுக வட்டாரத்திலேயே பரபரப்பான பேச்சு நிலவுகிறது.
மணிகண்டன் நீக்கம் எதிரொலி; அதிமுகவில் அடுத்தது என்ன?