காஷ்மீர் பி.டி.பி. கட்சியின் 2 எம்.பி.க்கள் ராஜினாமா?
காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள பி.டி.பி. கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தனது கட்சியைச் சேர்ந்த 2 ராஜ்யசபா உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதற்காக, ஒரு வாரத்திற்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், பிரிவு 370ஐ ரத்து செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்த மக்கள் ஜனநாயக கட்சித்(பி.டி.பி.) தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் தொலைதொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதன் பின்னர், மெகபூபா முப்தி கைது செய்து, அரசு விருந்தினர் மாளிகையில் சிறை வைத்துள்ளனர். அவரை பார்ப்பதற்கு கூட குடும்பத்தினர் உள்பட யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை என்று அவரது மகள் ஜாவேத் கூறியிருந்தார்.
இந்நிலையில், பி.டி.பி. கட்சியைச் சேர்ந்த மீர் பயாஸ், நாசிர் அகமத் லவாய் ஆகிய 2 ராஜ்யசபா உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யுமாறு மெகபூபா கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த 2 எம்.பி.க்களும் ராஜ்யசபாவில் பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்ட தீர்மானம் ெகாண்டு வரப்பட்ட போது, அரசியல் சட்டநகலை கிழித்தெறிந்தனர். அதனால், அவர்கள் உடனடியாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் அரசியல் சட்ட நகலை கிழித்ததால், அவர்களின் எம்.பி. பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதனால், அதற்கு முன்பாக ராஜினாமா செய்யுமாறு 2 பேருக்கும் மெகபூபா தகவல் அனுப்பியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து மீர் பயாஸ் கூறுகையில், ‘‘நாங்கள் யாரிடமும் பேச முடியவில்லை. ஏனெனில், தகவல் தொடர்புகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமையை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். ராஜினாமா குறித்து விவாதித்து பின்பு முடிவு செய்வோம்’’ என்றார்.
தனிமைச் சிறையில் மெகபூபா அடைப்பு; மகள் குற்றச்சாட்டு