காஷ்மீர் விவகாரம் எங்கள் உள்நாட்டு பிரச்னை பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதைக் காரணம் காட்டி இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்புவது ஒரு தலைப்பட்சமான மற்றும் அவசரமான முடிவு என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து விட்டது. இதற்கு எதிர்ப்பும் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தை அவசரமாக கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பேசிய இம்ரான் கான்,காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு நடந்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், இந்தியாவுடன் தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வது என்றும், இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தை துண்டித்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இரு நாடுகளிடையேயான போக்குவரத்தையும் துண்டித்து வாகா எல்லையை மூடப் போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு அவசரமாக மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வது குறித்து பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இது இரு நாட்டு நல்லூறவுகளையும் பாதிக்கும் என இந்திய வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகள் தொடர்பாக ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்துள்ளது அவசரமான முடிவாகும். இதனை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வது தொடர்பான சமீபத்திய நடவடிக்கைகள் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயல்கிறது. இந்தியாவின் உள்விவகாரத்திலும், அதிகார வரம்பிலும் பாகிஸ்தான் தலையிட முற்படுவது ஒருபோதும் வெற்றிபெறாது.தூதரக உறவுகளை முறிக்கும் முடிவை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீருக்காக உயிரை கொடுக்க தயார்; மக்களவையில் அமித்ஷா பேச்சு

More News >>