மாரடைப்பு, இதய செயலிழப்பு: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

மாரடைப்பு (Heart Attack), இதய செயலிழப்பு (Cardiac Arrest) இரண்டும் ஒரே பொருளில் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டும் ஒன்றுதானா அல்லது இவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளதா? மாரடைப்பு, இதய செயலிழப்பு இரண்டும் வேறானவை.

மாரடைப்பு என்றால் என்ன?இதயம், தசையினால் ஆனது. அது செயல்படுவதற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் தேவை. இதயத்தின் தசைகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்வதற்கு இரத்த நாளங்கள் உள்ளன. இந்த இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதே 'மாரடைப்பு' (Heart Attack) எனப்படுகிறது. நாளங்களில் ஏற்படும் அடைப்பின் காரணமாக இதயத்தின் தசைகளுக்கு இரத்தம் வர முடியாத நிலையே மாரடைப்பு. அந்த நாளங்கள் விரைவில் திறக்கப்பட்டு இரத்தம் பாயாவிட்டால், இதய தசைகள் உயிரிழக்க ஆரம்பிக்கும்.

மாரடைப்பின்போது என்ன நிகழ்கிறது?மாரடைப்பு ஏற்பட்டால் அதிகபட்ச வலி தோன்றும். மார்பில் இறுக்கம், அழுத்தம், வேதனை இவற்றோடு இதயத்தை பிழிவதுபோன்ற உணர்வு உண்டாகும். சிலருக்கு உடலின் இடப்பக்கம் மேற்புறம், இடப்பக்க தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் வலி ஏற்படும். மாரடைப்பு ஏற்பட்டால், இதயம் துடிப்பதை நிறுத்துவதில்லை.

மாரடைப்பின் காரணிகள்:அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன், குடும்பத்தில் முன்னோருக்கு இதய நோய் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு என்னும் சர்க்கரை நோய், உடற்பயிற்சியின்மை, அதிக நேரம் அமர்ந்திருக்கும் உடலுழைப்பு இல்லாத வேலை இவையே பெரும்பாலும் மாரடைப்புக்கு காரணமாகின்றன.

இதய செயலிழப்பு என்றால் என்ன?இதய செயலிழப்பு ஏற்பட்டால், இதயம் துடிப்பதை முழுவதுமாக நிறுத்திவிடும். இதய மின்தூண்டலில் ஏற்படும் கோளாறினால் இதய துடிப்பின் ஒழுங்கு சீர்குலைவதால் இதய செயலிழப்பு நேரிடும். இதுவே மாரடைப்புக்கும் இதய செயலிழப்புக்கும் இடையே உள்ள முதனிலை வேறுபாடு.

இதய செயலிழப்பின்போது என்ன நிகழ்கிறது?இதயம் துடிப்பை நிறுத்திவிடுவதால் பாதிக்கப்பட்டவர் நினைவிழப்பார். சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு இருக்காது. இதய செயலிழப்பு நிகழ்ந்து சில நிமிட நேரத்திற்குள் முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்து விடுவார்.

இதய செயலிழப்பின் காரணிகள்:உற்சாகம் தரக்கூடிய போதை வஸ்து பயன்பாடு, இதய நோய்க்கான மருந்துகள், இதய தசையில் ஏற்படும் பாதிப்பு, இதய துடிப்பில் மாறுபாடு ஆகியவை இதய செயலிழப்பு நேரிட காரணமாகின்றன.

இதய செயலிழப்பை தவிர்க்க ஒழுங்காக பரிசோதனை செய்யவேண்டும். இதய செயலிழப்பு ஒரு நபருக்கு ஏற்பட்டால் அவசர சிகிச்சை குழு வருவதற்குள் இதயத்தை அழுத்தி, சுவாசம் அளிக்க முயற்சிக்கும் (CPR- Chest compressions and rescue breaths) முதலுதவி அளிக்கவேண்டும்.

More News >>