உங்களவர் உண்மையாய் நேசிக்கிறாரா என்பதை கண்டறிவது எப்படி?
கனவு கலையாத கண்களோடு காதலருக்காக காத்திருக்கிறீர்களா? 'அவன் உண்மையாய் என்னை நேசிக்கிறானா?' என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறதா? உண்மையில் உங்கள் இணையான ஆண் நண்பர் / பெண் தோழி உங்களை காதலிக்கிறாரா அல்லது நீங்கள் ஒருதலைக் காதலில் விழுந்துள்ளீர்களா என்பதை கண்டறிய சில குறிப்புகள்:
நீங்கள் மட்டுமே தொடங்குகிறீர்களா?வெளியே சந்திப்பதற்கான திட்டம் அல்லது போன் அரட்டையை முதலில் நீங்கள்தான் முன்னெடுக்கிறீர்களா? ஆண் நண்பர் / பெண் தோழியுடன் நேரத்தை கழிக்க நீங்கள் மட்டுமே முயற்சி எடுத்தால், அப்படி நீங்கள் முயற்சிக்காவிட்டால், அவன் / அவள் உங்களோடு தொடர்பு கொள்ள முயற்சிக்காவிட்டால், காதல் கனவு உங்களுக்கு மட்டுமே உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
முன்னுரிமை பட்டியலில் இல்லையா?நீங்கள் இருவரும் சந்திப்பதற்காக போட்ட திட்டத்தில் திடீரென ஒரு மாறுதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தனக்கு வசதியான நேரத்தில் மட்டுமே உங்கள் நண்பர் / தோழி சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவதில் திடமாக இருந்தால் அவன் / அவள் உங்களவரல்ல! உங்களை சந்தித்த வேண்டிய தவிர்த்து, அந்நேரத்தை தனது நட்பு வட்டாரத்தில் செலவழித்தால் சந்தேகமேயில்லாமல், நீங்கள் மட்டுமே அவனை / அவளை காதலிக்கிறீர்கள் என்றறிக. அந்தப் பக்கம் காதல் பற்றிய எண்ணமில்லை என்று தெளிக.
உறவில் பிரச்னைஉங்கள் இருவருக்கும் இடையே ஊடல், பிணக்கு வந்து விடுகிறது. அதைத் தீர்க்க உங்கள் நண்பர் / தோழி ஏதாவது முயற்சி எடுக்கிறாரா? சண்டையிட்டு பல நாள் பேசாமல் இருந்தாலும், தானாக முன்வந்து பேசுவதற்கு, தொடர்பு கொள்வதற்கு முயலாமல் பிரச்னையை அலட்சியம் செய்தால் அவன் / அவள் உங்களவர் அல்ல.
அலட்சியம் செய்கிறாரா?'மனசே சரியில்லை' என்ற நிலையில் நீங்கள் இருக்கும்போது, உங்கள் இணை திட்டமிட்டு உங்களை தவிர்க்கிறாரா? அவன் / அவள் பக்கம் தவறு இருந்தாலும், பேச்சுக்குக் கூட 'ஸாரி' கேட்காமல் தொடர்ந்து உங்களை புறக்கணிக்கிறாரா? உங்கள் காதல், கனவு மட்டுமே என்று அறிந்து கொள்ளுங்கள்.
குழப்பமாய் தொடர்கிறீர்களா?'நான் அவனை நேசிக்குமளவுக்கு அவன் என்னை நேசிக்கிறானா?' என்ற ஐயம் உங்களுக்குள் எழுகிறதா? உங்கள்மேல் அவனுக்கு / அவளுக்கு காதல் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளதா? உங்களோடு மனம் விட்டு உரையாடுகிறானா (ளா)? உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறானா (ளா)? என்பதை கவனியுங்கள். உணர்வில்லாத வெற்றுப் பேச்சு என்றால் புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் புரிந்து கொண்டுள்ளாரா?'காதல்' என்றால் கரிசனை கண்டிப்பாக இருக்கவேண்டும். உங்கள் தேவைகள், உங்கள் குடும்ப பின்னணி அறிந்து கருத்தாய் விசாரிப்பதோடு உங்கள் ஆரோக்கியத்தை பற்றி அக்கறையுள்ளவராய் இருக்கிறாரா? அப்படி இல்லையெனில், ஏனோதானோவென்று பழகினால், அவனுக்கு / அவளுக்கு சிவப்பு கொடி காட்டிவிடுவது உத்தமம்!