முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது குடியரசுத் தலைவர் வழங்கினார்.

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கி கவுரவித்தார்.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கும், அசாமிய இசை மேதை மறைந்த பூபேன் ஹசாரிகா, சமூக சேவகரும், பாரதிய ஜனசங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக் ஆகியோக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு 4 ஆண்டுகள் இடைவெளியில் இந்தாண்டு பாரத ரத்னா விருதுகள் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் பூபேன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு, அவர்களின் மறைவுக்கு பிந்தைய விருதாக பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். இதே போல், பூபன் ஹசாரிகா, நானாஜி தேஷ்முக் ஆகிய இருவரின் உறவினர்களிடமும் பாரத ரத்னா விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.

More News >>