வேலூரில் வெற்றி யாருக்கு..? நாளை வாக்கு எண்ணிக்கை
வேலூர் மக்களவைத் தொகுதியில் கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வெற்றி பெறப்போவது திமுகவா? அதிமுகவா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி இங்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் 8ன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டனர். இது தவிர நாம் தமிழர் கட்சியின் ஆதிலட்சுமி உட்பட மொத்தம் 28 பேர் களத்தில் இருந்தனர்.
வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்னையாகக் கருதி அதிமுகவும், திமுகவும் கடும் பலப்பரீட்சை நடத்தின. இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வேலூரில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் இரண்டு கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதையடுத்து கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 10 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்பதால் வெற்றி பெறப் போவது திமுகவா? அதிமுகவா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகளாக எண்ணப்படும் என்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.