காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டது தற்காலிகம்தான் பிரதமர் மோடி உறுதி
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது தற்காலிகமானதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகிய பிரிவுகளை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், காஷ்மீரில் அசம்பாவிதங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக முன்னாள் முதலமைச்சர்கள் மெகபூபா, உமர் அப்துல்லா ஆகியோர் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு ரேடியோ, டிவி.யில் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:
ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் புதிய சகாப்தம் படைத்துள்ளோம். இது சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர் ஆகியோரின் கனவாகும். அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றால், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்னவென்று யாராலும் சொல்ல முடியவில்லை.
மாறாக, பிரிவினைவாதம், பயங்கரவாதம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி ஆகியவைதான் காஷ்மீர் மக்கள் இது வரை பார்த்து வந்தது. இனிமேல் இந்த நிலைமை மாறும். மாநிலம் சிறந்த வளர்ச்சியை எட்டும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டது தற்காலிகமானதுதான். விரைவில் மாநிலமாக கொண்டு வரப்படும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.