ஜம்மு காஷ்மீரை இனிமேல் இளைஞர்கள் வழிநடத்துவார்கள் பிரதமர் மோடி பேச்சு
ஜம்மு காஷ்மீரில் குடும்ப ஆட்சிகள் காரணமாக இளைஞர்களால் அரசியல் தலைவர்களாக வர இயலவில்லை. இனிமேல் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்கள்தான் வழிநடத்துவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு ரேடியோ, டிவி.யில் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:காஷ்மீரீரில் இது வரை பயங்கரவாதத்தை தூண்டி விட்ட பாகிஸ்தானுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். பயங்கரவாதச் செயல்களால் ஏராளமான அப்பாவி மக்களும், காவல் துறையினரும் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமை இருந்தும் கூட வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர். அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. 1947க்கு பிறகு வந்தவர்களால், அவர்கள் தடுக்கப்பட்டனர்.
இப்போது காஷ்மீரில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். ஜம்மு காஷ்மீரில் குடும்ப ஆட்சிகள் காரணமாக இளைஞர்களால் அரசியல் தலைவர்களாக வர இயலவில்லை. இனிமேல் காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை இளைஞர்கள்தான் வழிநடத்துவார்கள். ஜம்மு காஷ்மீர் உலகின் மிகப் பெரிய சுற்றுலா தலமாக உருவாகும். பாலிவுட் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகளும் காஷ்மீரில் நடைபெறும்.
காஷ்மீரில் புதிய தொழில்களை தொடங்க வருமாறு தொழிற்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினையென்றால் அது நமக்கான பிரச்சினை ஆகும். நாம் எப்போதும் அவர்களுடன் இருப்போம். பக்ரீத் திருநாள் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். பண்டிகையை கொண்டாட காஷ்மீர் மாநில மக்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.