இந்தியா Vs மே.இ.தீவுகள் முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து
இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி, அடிக்கடி மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் பாதியில் ரத்தானது.
மே.இந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி மூன்று போட்டிகளிலுமே வெற்றியை ருசித்தது. இந்நிலையில், அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி கயானாவில் நேற்றிரவு நடந்தது. மழை பெய்ததன் காரணமாக, போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால் தலா 43 ஓவராக போட்டி குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மே.இ.தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். மழை பெய்திருந்ததால் ஈரப்பதமான மைதானத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் இந்த ஜோடி திணறினர். புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது சமியின் வேகத்தில் திணறிய இந்த ஜோடி 5.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, மீண்டும் மழை வர ஆட்டம் தடைப்பட்டது. 90 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இம்முறை போட்டி தலா 34 ஓவராக குறைக்கப்பட்டது.
அப்போது லீவிஸ் அதிரடி காட்டத் தொடங்கினார். புவனேஷ்வர் குமார் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட லீவிஸ், தொடர்ந்து கலீல் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மறுபக்கம் ஆடிய அதிரடி வீரர் கெய்ல் மந்தமாக விளையாடி ஒரு பவுண்டரி கூட அடிக்காத நிலையில் குல்தீப் 'சுழலில்' சிக்கி 4 ரன்களுடன் வெளியேறினார். மே.இ.தீவுகள் அணி 13 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து கன மழை பெய்ததால் போட்டி பாதியில் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அப்போதுலீவிஸ் 40 ரன்களுடனும், ஹோப் 6 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை மறுதினம் (11-ந் தேதி) நடைபெறுகிறது.