வேலூர் தேர்தல் முன்னணி நிலவரம் : முதல் சுற்றில் அதிமுக, திமுக இடையே இழுபறி
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்றில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 400 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.
வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்னையாகக் கொண்டு, அதிமுகவும், திமுகவும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டிய நிலையில் கடந்த 5-ந் தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்றார்.. பின்னர் மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதல் சுற்றில் ஏ.சி.சண்முகம் 400 வாக்குகள் முன்னிலை பெற்றார்,வாக்குகள் விபரம்:
ஏ.சி.சண்முகம் (அதிமுக):21660
கதிர் ஆனந்த் (திமுக):21177
தீபலட்சுமி (நாம் தமிழர்) : 400