நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் மழை அவலாஞ்சியில் 91.1 செ.மீ பதிவு..! பேரிடர் மீட்புக்குழு விரைவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை கொட்டி வருகிறது. அவலாஞ்சியில் நேற்றும் வரலாறு காணாத அளவுக்கு 91.1 செ.மீ., மழை பதிவான நிலையில், கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் தலைமையில் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.

தென் மேற்கு பருவ மழையின் தீவிரத்தால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் பவானி, நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதிலும் நீலகிரி மாவட்டத்தில் தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு விடாது 3 நாட்களுக்கும் மேலாக மழை கொட்டி வருகிறது. அவலாஞ்சியில் நேற்று 82 செ.மீ மழை பதிவான நிலையில் இன்று காலை 8 வரையிலான 24 மணி நேரத்தில் 91.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எங்கும் பதிவாகாத மழை அளவாகும். கடந்த 3 நாட்களில் மட்டும் அவலாஞ்சியில் 213 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதால் மேலும் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மழை பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர் கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் நீலகிரிக்கு விரைந்துள்ளனர்.

More News >>