அயோத்தி வழக்கை அவசரமாக விசாரிப்பதா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எதிர்ப்பு
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை வாரத்தில் 5 நாள் விசாரணை என்ற ரீதியில் அவசரமாக முடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி விசாரணை நடத்தினால், வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்வேன் என்று முஸ்லீம் அமைப்பின் சார்பில் வாதாடும் சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவது இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. ஆனால், சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருகிறது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கு, மத்தியஸ்தர் குழுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு நியமித்தது. ஆனால், அந்த மத்தியஸ்தர் குழு, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் சமரசம் பேசி பார்த்து விட்டு, சுமுக முடிவை எட்ட முடியவில்லை என்று கூறி விட்டது. இதையடுத்து, அயோத்தி வழக்கின் விசாரணையை தினந்தோறும் நடத்தி விரைவாக முடிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதன்படி, நான்காவது நாளாக இன்று வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முஸ்லிம் அமைப்பு ஒன்றின் சார்பில் வாதாடும் சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான், நீதிபதிகளிடம் கூறுகையில், ‘‘இந்த வழக்கை வாரத்தின் 5 நாட்களுமாக தொடர்ச்சியாக விசாரணை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது. அப்படி 5 நாட்களும் விசாரணை நடத்தினால், அது மனிதத்தன்மையற்றது. எங்களால் தினந்தோறும் தொடர்ச்சியாக இந்த வழக்கில் வாதாட முடியாது. வழக்கை அவசரமாக விசாரித்து முடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி விசாரணை நடத்தினால், நான் வழக்கில் இருந்து விலகிக் கொள்வேன்’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ‘‘உங்கள் புகாரை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக விரைவில் உங்களுக்கு தகவல் அளிக்கிறோம்’’ என்றார்.
அயோத்தி மத்தியஸ்தர் குழு 18ம் தேதி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு