ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஜனாதிபதி ஒப்புதல்
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதற்கான மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான, காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மறுநாள் மக்களவையிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து இம்மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதையடுத்து, இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உருவாவது குறித்து கெஜட்டிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக காஷ்மீரும், பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் பிரிக்கப்படுவது உறுதியாகி அதற்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட உள்ளது.