காங்கிரஸ் கமிட்டி தலைவரை தேர்வு செய்ய புதிய திட்டம் செயற்குழுவில் முடிவு
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு இன்று(ஆக.10) காலை கூடியது. இதில், கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு மாநில தலைவர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சோனியா, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் 5 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. தோல்வி குறித்து விவாதிக்க கடந்த ஜூன் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகல் என அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.
அதன்பிறகு, தேர்தலின் போது மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம் உள்பட பலரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும், யாருமே சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் ராகுல் குற்றம் சாட்டினார். அதே போல், பா.ஜ.க.வை எதிர்த்து தான் தனி ஆளாக நின்று போராட வேண்டியதாயிற்று என்றும் குறிப்பிட்டார். தலைவர் பதவியில் இருந்து விலகுவதில் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.
இதையடுத்து, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் உள்பட பலரும் ராகுலிடம் முடிவை மாற்றிக் கொள்ள வலியுறுத்தினர். ஆனால், ராகுல்காந்தி அசைந்து கொடுக்கவே இல்லை. இதனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் யார் என்று தெரியாமலேயே 2 மாதங்கள் ஓடி விட்டன.
இந்நிலையில், கட்சியின் செயற்குழு இன்று(ஆக.10) காலை கூடியது. இதில் முகுல்வாஸ்னிக் புதிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று நேற்றே பேச்சு அடிபட்டது. ஆனால், அப்படி தேர்வு செய்யப்படவில்லை. டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அகமது படேல், ப.சிதம்பரம், அந்தோணி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், புதிய தலைவரை தேர்வு செய்ய மாநில தலைவர்கள் அனைவரிடமும் தனித்தனியாக கருத்து கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாநில தலைவர்களிடம் கருத்து கேட்பதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டன. சோனியா தலைமையிலான குழு, கிழக்கு பிராந்தியத்திலும், ராகுல் தலைமையிலான குழு மேற்கு பிராந்தியத்திலும், பிரியங்கா தலைமையிலான குழு வடக்கு பிராந்தியத்தில் ஒரு பகுதியிலும், மன்மோகன் தலைமையிலான குழு தெற்கு பிராந்தியத்திலும், அம்பிகா சோனி தலைமையிலான குழு வடகிழக்கு பிராந்தியத்திலும் கருத்துக்களை கேட்கவுள்ளன.
காங்கிரஸ் கட்சித் தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு? நாளை செயற்குழுவில் முடிவு