காஷ்மீர் சிறப்பு சலுகை ரத்து இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று இந்தியாவின் நடவடிக்கையை ரஷ்யா ஆதரித்துள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலத்தைப் பிரித்துள்ளது. இதனால், காஷ்மீரில் எதிர்ப்பு மற்றும் வன்முறைகள் ஏற்படுமோ என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு முன்கூட்டியே ராணுவத்தை குவித்து அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.
இந்நிலையில், இந்தியாவின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘காஷ்மீருக்கான அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் மாநிலத்தை பிரி்த்த நடவடிக்கைகள் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதுதான். இதனால், இந்திய, பாகிஸ்தான் எல்லைகளில் எந்த பிரச்னையும் ஏற்படாமல், இரு நாடுகளும் சுமுக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலமும், சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையிலும் இரு நாடுகளும் பிரச்னைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என்று ரஷ்யா எதிர்பார்க்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீரில் முழு அமைதி; அஜித்தோவல் நேரில் ஆய்வு