கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை

வேலூரில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று காலை கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது, பணபட்டுவாடா புகார் காரணமாக வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த தேர்தல் கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 28 பேர் போட்டியிட்டாலும் அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இடையேதான் கடும் போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாயின. வாக்குகள் எண்ணிய போது ஒவ்வொரு சுற்றிலும் அதிமுகவும், திமுகவும் மாறி, மாறி முன்னிலை வந்தன. இதனால், 12 சுற்றுகள் வரை நீண்ட இழுபறி காணப்பட்டது. இறுதியாக வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது, ஏ.சி.சண்முகத்தை விட 8,141 வாக்குகள் கதிர் ஆனந்த் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கதிர் ஆனந்துக்கு 4 லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகளும், ஏ.சி.சண்முகத்துக்கு 4 லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகளும் கிடைத்தன.இந்நிலையில், வேலூர் எம்.பி.யாக தேர்வான கதிர் ஆனந்த் இன்று காலை சென்னை அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆசி பெற்றார். பின்னர், ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டுக்கு சென்று அவரிடமும் ஆசி பெற்றார்.

வேலூர் கோட்டையை திமுக வசமாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி; மு.க.ஸ்டாலின் உருக்கம்

More News >>