மனம் கைவசம் உலகம் உங்கள் வசம்!
நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும்.
கவனமும் திறமையும்:கவனத்தை ஓரிடத்தில் குவிப்பது கடினமான ஒன்று. பலரும் திறமையும் கவனகுவிப்பும் ஒன்று என்று நினைத்து விடுகிறார்கள். அவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையானாலும் முற்றிலும் வேறானவை.
ஒருவர் எவ்வளவு திறமைமிக்கவராக இருந்தாலும் மனம் நிம்மதியாக இல்லையென்றால் அவரது கவனம் சிதறிவிடும். உங்கள் திறமையின் முன்பு உறவினர்களோ, நண்பர்களோ எதிராளியாக நிற்கும் மனம் சஞ்சலப்படும்; திறமையை முழு மனதோடு பயன்படுத்த இயலாமல் போகக்கூடும்.
எதிர்காலத்தை குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விநாடியும் நம் மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கும் மற்றும் மனம் அழுத்தம் அதிகம் ஆகும் . ஆனால், அதற்காக யதார்த்தம் மாறிவிடப் போவதில்லை. எதிர்காலத்தை பற்றி கவலைப்பட்டால், அதை எதிர்கொள்ளுவதற்கான ஆற்றல் உங்களுக்கு இல்லாமல் போகும் அல்லது எதிர்காலத்தை இன்னென்ன விதமாக அனுபவிக்க வேண்டும் என்ற உங்கள் திட்டங்கள் நிறைவேறாமல் போய்விடும்.நீங்கள் எதிர்காலத்தில் உங்களை யாராக கற்பனை செய்கிறீர்களோ அதைக்காட்டிலும் சிறந்தவராகிவிட இயலாது. அதாவது நீங்கள் மனதில் ஒன்றை வரிந்துகொண்டால்தான் நிறைவேற்ற முடியும். எதிர்காலத்தைக் குறித்த எதிர்பார்ப்பே, உங்கள் மனதை வலுப்படுத்தி உங்கள் குறிக்கோளை அடைவதற்கு தகுதிபடுத்துகிறது.
மனவலிமை:உதாரணமாக, நம் அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால், அனைவரின் இதயமும் ஆரோக்கியமாக உள்ளதா? இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு சில பயிற்சிகளை செய்யவேண்டும். எந்தப் பயிற்சியும் செய்யாதோருக்கு இதய ஆரோக்கியம் கிடைக்காது. நுரையீலை நாம் எப்படி பராமரிக்கிறோம் என்பதை பொறுத்தே நம் உடலின் ஆரோக்கியம் அமைகிறது. சிலர் புகை பிடித்து அதை கெடுத்துப் போடுகிறார்கள்; வேறு சிலர் மூச்சுப் பயிற்சி செய்து அதை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளுகிறார்கள். மனதை குறித்தும் அதேநிலைதான். மனதை கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதுவே வாழ்வில் நீங்கள் சாதிக்கப்போவதை வரையறுக்கும். மனதை சரியானபடி பராமரிக்காவிட்டால், உடலின் ஆசைகள், எதிர்மறை சிந்தனைகள், வேண்டாத உணர்வுகள் அதை ஆக்ரமித்து விடும். மனம் உங்கள் வசம் இல்லாவிட்டால் உலகத்தின் தாக்கத்தால் கோபம், பயம், தடுமாற்றம், இச்சை ஆகியவை நம்மை பிடித்துக்கொள்ளும். மனம் வலிமையாக இருக்கும் பட்சத்தில், நம்மால் கவனத்தை ஓரிடத்தில் குவிக்க இயலும். இதை புரிந்துகொண்டால் மட்டுமே, மனதை மாற்றுவதன் மூலம் வாழ்வையும் மாற்ற இயலும்.
அங்கீகாரம்:எது எப்படியிருந்தாலும் நாம் மனித மனம், நம் பின்னால் யாரும் புறம்பேசினால் வருத்தப்படும். பயம், சந்தேகம் மனிதர்களுக்குள் இருப்பது இயற்கை. ஆனால், நம்மை யாராவது தவறாக நடத்தினால் அதை மனம் ஒப்புக்கொள்வதில்லை. விலங்குகள் அங்கீகாரத்தையோ, பாராட்டையோ நாடுவதில்லை. மனித மனம் அப்படிப்பட்டதன்று. உடலுக்கு உணவு போல, மனதுக்கு உணவு அங்கீகாரமும் பாராட்டும்தான். வலிமையான மனதை கொண்ட மனிதன், தன்மீது குற்றங்கண்டு பிடிக்க முயலுபவர் முன்னே தன்னை நிரூபிக்க வலிந்து முயற்சிக்க மாட்டான். யாராவது ஒருவர் உங்களிடம் குற்றம் காண முயன்றால், நீங்கள் தவறிழைத்தது அல்ல, தங்களிடமுள்ள குறையை சரி செய்து கொள்ள முடியாததே காரணம் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் விமர்சனத்தின் மீது கவனத்தை செலுத்தாமல், நீங்கள் தீர்மானித்துள்ள இலக்கு நோக்கிய பாதையில் கவனமாய் செல்லுங்கள். சரியான பாதையை தேர்ந்தெடுத்து, உங்களையே நீங்கள் அறிந்து பயணத்தை தொடருங்கள்; உலகம் உங்கள் வசமாகும்.
இளமை மாறாமலிருக்க இவற்றை சாப்பிடுங்க!