மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்கிறார் மன்மோகன்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் ராஜ்சபாவுக்கு செல்கிறார். இந்த முறை அவர் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார். வரும் 13ம் தேதியன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன்சிங். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த மன்மோகன்சிங்கின் பொருளாதார நிபுணத்துவம் மீது நம்பிக்கை கொண்டிருந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், கடந்த 1991ம் ஆண்டில் மன்மோகனை நிதியமைச்சர் ஆக்கினார். அப்போது அவர் அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதல் அவர் ராஜ்யசபா உறுப்பினராக கடந்த 29 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.

கடந்த ஜூன் மாதத்தில் மன்மோகன்சிங்கின், ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால், இந்த முறை அசாம் சட்டசபையில் காங்கிரஸ் பலம் குறைந்து விட்டதால், அங்கிருந்து மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக மன்மோகன் சிங்கால் தேர்வாக முடியவில்லை. இதனால், கடந்த மாதம் தமிழகத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் மன்மோகனுக்கு வாய்ப்பு தருமாறு திமுகவிடம் கேட்கப்பட்டது. ஆனால், அந்த சமயத்தில் கராத்தே தியாகராஜன் பேசியதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மீது திமுக அதிருப்தி கொண்டது. மேலும், திமுகவினர் காங்கிரஸ் மீது அதிருப்தியாக உள்ளதாக கூறி, மன்மோகனுக்கு வாய்ப்பு தர திமுக தலைமை மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கராத்தே தியாகராஜன், காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டதுதான் மிச்சம். மன்மோகனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், ராஜஸ்தானில் ஒரு பாஜக ராஜ்யசபா உறுப்பினர் மரணமடைந்ததால், அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரசுக்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, மன்மோகன்சிங் அந்த தேர்தலில் போட்டியிடுகிறார். வரும் 13ம் தேதி, மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

More News >>